Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விரைவில் சபரிமலை வழக்கில் முக்கிய தீர்ப்பு

நவம்பர் 10, 2019 03:31

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், நேற்று அயோத்தி வழக்கில் இவரது அமர்வு தீர்ப்பளித்தது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே வேலைநாட்கள் உள்ள நிலையில், தலைமை நீதிபதி அமர்வு 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிட உள்ளதால் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகளும் இணைந்து ஒரே தீர்ப்பினை வழங்கினர். அதன்படி, இஸ்லாமியர்கள் தங்களின் மசூதியை அமைத்துக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவ. 17ம் தேதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிவிட்டார். அதேசமயம், மீதமிருக்கும் இந்த ஒரு வாரத்தில், அவர் இன்னும் வேறு எந்த முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது. அதாவது, நாளை (திங்கட்கிழமை - உள்ளூர் விடுமுறை), நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை - குருநானக் ஜெயந்தி) உச்சநீதிமன்ற விடுமுறை. வரும் 13, 14, 15ம் தேதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற வேலை நாட்கள். அதன்பின், 16ம் தேதி (சனிக்கிழமை விடுமுறை), 17ம் தேதி (ஞாயிறு வழக்கமான விடுமுறை). இந்த நாளுடன் தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுகிறார். 

அதன்பின், அடுத்த நாள் (நவ. 18) உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 3 நாட்கள் மட்டுமே பணியாற்ற உள்ளார். அந்த நாட்களில் அவரது தலைமையிலான அமர்வு விசாரித்த சில முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளதால், நாடு முழுவதும் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு செ. 28ம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், 4:1 என்ற அடிப்படையிலான தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி அளித்தது. ஆனால், அந்த தீர்ப்புக்கு ஒரு சில இந்து குழுக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த தீர்ப்புக்கு பின்னர், கிட்டத்தட்ட 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு அளிக்க உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், கடந்த ஆண்டு டிச. 14ம் தேதி வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்கள் தொடர்பாக தனது தீர்ப்பை வழங்க உள்ளது. முன்னதாக, பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உட்பட பல தரப்பினர் குற்றம் சாட்டினர். இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை’ என்று தீர்ப்பு அளித்தது. இதற்கிடையே, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்த சில ஆவணங்கள் ஊடகங்களில் வெளியானதால், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட உள்ளது.

இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வர வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான வழக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மற்ற பொது அதிகாரிகளைப் போலவே தலைமை நீதிபதி அலுவலகமும் உச்ச நீதிமன்றமும் தகவல்களை வெளியிடக் கடமைப்பட்டிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பளிக்கும். இந்த வழக்கில் ஏப். 4ம் தேதி பெஞ்ச் தனது உத்தரவை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்