Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம்

நவம்பர் 11, 2019 04:01

சென்னை: தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பொதுக்குழுவுக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, எஸ்.ஜெகத்ரட்சகன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், பொதுக்குழு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் களப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் சில பிரச்சினைகளை முன்வைத்தனர். கோஷ்டி பூசல், உள்கட்சி பிரச்சினை தொடர்பான புகார்களை கூறினர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் முதுமை காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். ஆனாலும் அவர் பெயரில்தான் கட்சியின் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என தி.மு.க. முடிவு செய்தது.

அதன்படி, தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் இனி மு.க.ஸ்டாலினுக்கு கட்சிரீதியான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. அதேநேரம் தி.மு.க. பொதுச்செயலாளராக க.அன்பழகன் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்