Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவல் ஆய்வாளர் மாற்றத்திற்கு எதிராக பெண்கள் திடீர் சாலை மறியல்

நவம்பர் 12, 2019 09:46

சென்னை: காவல் ஆய்வாளர் மாற்றத்திற்கு எதிராக நடுரோட்டில் மறியல் செய்து, காலில் விழுந்து, கண்ணீர் விட்ட காசிமேடு பகுதி மக்கள். இது எல்லாத்துக்கும் காரணம் அந்தப் பகுதி மக்கள் அல்ல.. சில சமூக விரோதிகள்தான். இந்த ரவுடிக் கும்பலால் கொலை, குற்றங்கள் அதிகம் நடைபெறும்.. பெண்கள் இந்த பகுதிகளில் பாதுகாப்பாக கூட நடக்க முடியாது. 

இந்த சமயத்தில்தான் சிதம்பரம் முருகேசன் இன்ஸ்பெக்டராக காசிமேடு ஸ்டேஷனுக்கு வந்தார். பெண்களின் பாதுகாப்பைதான் இவர் முதலில் கையில் எடுத்தார். வன்முறை வெறியாட்டங்களை கட்டுப்படுத்தினார். அராஜக பேர்வழிகளின் வாலை ஒட்ட நறுக்கினார். ரவுடிகளை ஒடுக்கினார்.

காசிமேடு இதற்கு பிறகுதான் காசிமேடு மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது.. பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வு வந்தது.. காசிமேட்டில் நடந்த ஒவ்வொரு வன்முறை சம்பவத்திலும் இன்ஸ்பெக்டர் எடுத்த நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக கண்கூடாக பார்த்து நெகிழ்ந்தனர். இப்போது இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்பர் வந்துள்ளது.. 

அம்பத்தூர் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த டிரான்ஸ்பருக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காசிமேட்டு மறியலை பார்த்தால், ஏதோ கிளர்ச்சி வெடித்து கிளம்பிய போராட்டம் போல இருந்தது.. பெண்களின் ஆவேசத்தையும், கண்ணீரையும் பார்த்தால், சொந்த வீட்டில் நிகழ்ந்த ஒரு துக்க நிகழ்வுக்கான உணர்வாகவே தெரிந்தது! 

திடீர் மறியல் காசிமேடு சிங்கார வேலன் நகர் மீனவ பகுதியைச் சேர்ந்த பெண்கள், காசிமேடு சூரிய நாராயண சாலையில் திடீரென மறியலில் உட்கார்ந்து விட்டனர். இன்ஸ்பெக்டரை மாற்றக்கூடாது என்று கோஷமிட்டனர். நெரிசல் மிகுந்த காசிமேடு டிராபிக்கினால் மேலும் நெருக்கப்பட்டது. தகவலறிந்து போலீசாரும் வந்துவிட்டார்கள். 

ஆனால் பெண்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகேசனும் வந்துவிட்டார். அவரும் பெண்களை சமாதானம் செய்து பார்த்தார்... அதையும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளவே இல்லை. "காசிமேடு ஸ்டேஷனை விட்டு நீங்க போகக்கூடாது.. நீங்கள் வந்தப்பறம்தான், இங்க ஒரு தப்பும் நடக்காம இருக்கு.. எங்களை விட்டு போய்டாதீங்க" என்றனர். ஒருசில பெண்கள் அவரது காலில் விழுந்து கதறி அழுதபடி வேண்டுகோள் விடுத்ததை பார்த்து காக்கி சட்டைகள் விக்கித்து நின்றனர். 

அவர்களை இன்ஸ்பெக்டர் தூக்கி எழுப்புவதும், இன்னும் சிலர் அவரை அரவணைக்க முயல்வதும்.. இதையெல்லாம் ஒரு நிமிஷம் பார்த்தால், என்னமோ சினிமாவில் வரும் சீன் போல இருக்கும்.. ஆனால் அவ்வளவும் உள்ளப்பெருக்கு.. உணர்ச்சி குவியல்!

பொதுவாக தமிழ் சினிமாக்களில் போலீசார்களை மலிவாக சித்தரித்தே காட்சிகள் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன.. இன்னமும் "இதுதான்டா போலீஸ்" அதிரடிகள் தமிழகத்தில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது.. காசிமேடு மக்களின் நிஜபார்வை நீக்கப்பட்டு போலிக்காட்சிகள் புனையப்பட்டு முற்றிலும் வேறாக அதன் முகம் காட்டப்பட்டு வருகிறது. 

தலைப்புச்செய்திகள்