Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து

நவம்பர் 13, 2019 04:09

புதுடெல்லி: மத்தியில் மோடி அரசு வந்த பிறகு, வெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி விதிமுறை உருவாக்கப்பட்டது. 

இதன்படி, வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் பதிவு இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு மேலும் 1,807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. 

இந்த நிறுவனங்கள், கடந்த 6 ஆண்டுகளுக்கான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை பலதடவை நினைவூட்டிய பிறகும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில், கர்நாடகாவில் உள்ள சுவாமி விவேகானந்தா கல்வி சொசைட்டி, மராட்டிய மாநிலத்தில் உள்ள பாப்டிஸ்ட் கிறிஸ்டியன் அசோசியேசன் ஆகியவையும் அடங்கும். பெங்களூருவை சேர்ந்த இன்போசிஸ் பவுண்டேசன், தானே கேட்டுக்கொண்டதால், அதன் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்