Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் ரயில் மோதி 4 இளைஞர்கள் பலி

நவம்பர் 14, 2019 04:50

கோவை: கோவையில் இருகூர் அருகே ராவுத்தர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ரயில்வே பாலத்தில் சில உடல்கள் சிதறி கிடப்பதாக போத்தனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போத்தனூர் காவல்துறையில் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமியும் கௌதமும் சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துள்ளனர். அதில் ஒரு சில பாடங்களில் அரியர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தேர்வு எழுதுவதற்காக சூலூர் வந்துள்ளனர். 

வந்த இடத்தில் இருகூரில் அறை எடுத்து தங்கி அதே கல்லூரியில் படித்து வந்த விஸ்வநேசன், சித்திக் ராஜா, ராஜசேகர் ஆகியோரை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் அருகிலிருந்த தண்டவாளத்துக்குச் சென்றுள்ளனர். 

தண்டவாளத்தில் அமர்ந்தவாறு 5 பேரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் 5 பேர் மீதும் மோதியிருக்கிறது. 

இதில் விஸ்வநேசன் தவிர மற்ற நால்வரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். ரயிலின் ஓட்டுநர் கொடுத்த தகவலின்படி வந்த ரயில்வே போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஸ்வநேசனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

உயிரிழந்த நால்வரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்