Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் என்பதாலேயே என் மகளைத் துணிந்து படிக்க அனுப்பினேன்: மாணவியின் தந்தை உருக்கம்

நவம்பர் 16, 2019 06:46

சென்னை: தமிழகம் என்பதாலேயே தனது மகளைத் துணிந்து படிக்க அனுப்பியதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார் அப்துல் லத்தீஃப்.
முன்னதாக கடந்த வாரம் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் அவரது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் அவரின் பேராசிரியர்கள் சிலரே என்றும் மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாணவி ஃபாத்திமா தனது செல்போன் ஸ்க்ரீன் சேவரில் "என் டேப்லெட்டைப் பார்க்கவும்" என்றிருந்தது. அதில் தன் மரணத்திற்கு பேராசிரியர் ஒருவர் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார் ஃபாத்திமா. மேலும் தனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்த 2 பேராசிரியர்களையும் குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்தே மாணவியின் பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி ஃபாத்திமாவின் தந்தையிடம் சிறப்பு விசாரணைக் குழு தலைவர் ஹெலினா விசாரணை நடத்தினார். க்ரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் அளித்த பேட்டியில், "தமிழகம் என்பதாலேயே என் மகளைத் துணிந்து படிக்க அனுப்பினேன். என் மகளின் மரணம் தொடர்பான எல்லா ஆதாரங்களையும் போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டேன். அவளின் கைரேகைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் எந்த உயர்நிலையில் இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இனி ஒரு பெண் பிள்ளைக்கு இத்தேசத்தில் இது போன்றதொரு காரியம் நடக்கக்கூடாது" என்றார்.

ஏற்கெனவே, ஃபாத்திமாவின் தாயாரும், "என் மகளுக்கு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது; அங்கெல்லாம் கும்பல் வன்முறைகள் நடப்பதால், பாதுகாப்பு கருதி சென்னை ஐஐடியில் சேர்ந்தோம். ஆனால் இங்கு இப்படி நேர்ந்துவிட்டது" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி அழைப்பின் பேரில் மாணவியின் தந்தை அவரை சந்திக்கச் செல்கிறார்.

தலைப்புச்செய்திகள்