Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சித் தேர்தல்: அம்மா இருந்தவரை உழைத்தவர்களுக்கு சீட் கிடைத்தது..இனி?

நவம்பர் 16, 2019 09:07

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதை யார் யாருக்குக் கொடுக்கப்போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அ.தி.மு.க அறிவித்திருந்த நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களின் மனைவிக்கும் உறவினர்களுக்கும் சீட் கேட்டுத் தலைமைக்கு நெருக்குதல் கொடுக்கிறார்கள் எனக் கொந்தளிக்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் நேற்றிலிருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.25,000 என்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.5,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.10,000 ரூபாயும் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2, 500 ரூபாயும் இதேபோல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5,000 ரூபாயும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,500 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ``சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில்தான் வாரிசுகளுக்கு சீட் கேட்டு தலைமையை வற்புறுத்துவார்கள். தற்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும் இச்செயல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களுக்கு உள்ளாட்சியில் கிடைக்கும் பதவியை வைத்து வாழ்க்கை நடத்துகிறோம். எங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்களுக்கும் செலவு செய்வோம். தற்போது இதிலும் தலைவர்களின் மகன்கள், அவரின் உறவினர்களுக்கு சீட் கேட்டு தலைமையை வற்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அ.திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதை யார் யாருக்குக் கொடுக்கப்போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி. அம்மா இருந்தபோது உழைத்தவர்களுக்கு சீட் கிடைத்தது.

ஆனால், எடப்பாடி, ஓ.பி.எஸ் என இரட்டை தலைமையால் கழகத்தில் உழைப்பவர்களுக்கு சீட் கிடைக்குமா சந்தேகம் எழுகிறது" என ஆதங்கக் குரல் எழுப்புகின்றனர்.

தலைப்புச்செய்திகள்