Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இணையவழி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்: தடுக்க புதிய பிரிவை தொடங்கிய சிபிஐ

நவம்பர் 16, 2019 12:24

புதுடெல்லி: இணையவழி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் விதத்தில் ஆன்லைனில் புதிய பிரிவொன்றை மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு க்ரைம் பிரிவு சிபிஐ இதைக் கவனித்துக் கொள்ளும்.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''சிபிஐயின் புதிய பிரிவு இணையத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, பரப்புவது, விளம்பரப்படுத்துவது. பார்ப்பது, தேடுவது, பதிவிறக்கம் செய்வது, ஊக்குவிப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுவர்களின் விவரங்களைச் சேகரிக்கும்.

அவர்கள்மீது இந்திய குற்றவியல் சட்டம் 1860, பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப் பிரிவு (போக்சோ) 2012, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்படும்,

இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை கடந்த 20 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இதனால் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் உலகளாவிய முறையில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும் இதே தொழில்நுட்பம் வேறொரு பரிமாணத்தையும் உருவாக்கியுள்ளது. அது முறையான வழிகாட்டலும் சோதனையும் இல்லாமல் போகும்போது குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதே. இதனால் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் இணையத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அபாயத்தில் இருக்கின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்