Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை: புதிதாக 4 போலீஸ் ஸ்டேஷன், ஆணையர் டேவிட்சன் தகவல்

நவம்பர் 18, 2019 08:56

மதுரை: கொலை கொள்ளை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மதுரை மாநகரில் புதிதாக நான்கு காவல் நிலையங்கள் வரவுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். மதுரை மாநகரம் உருவாக்கப்பட்டபோது அப்போதைய சூழ்நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இன்று மதுரை பல மடங்கு பெருகி விரிந்து பெருநகரமாக மாறி நிற்கிறது. ஆனாலும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இருந்தபோதிலும் குற்றங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

காவலர்கள் தேவை ஆனாலும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், மதுரை மாநகரில் குற்றம் கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக நான்கு காவல்நிலையங்கள் வரவுள்ளது. 2 ஆக பிரிக்கப்படும் அண்ணா நகர் இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் கூறுகையில், அண்ணாநகர் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து திருப்பாலை மற்றும் மாட்டுத்தாவணியில் இரண்டு காவல் நிலையங்கள் வர உள்ளன. 

கோச்சடை - அனுப்பானடி இதேபோல் அவனியாபுரம், எஸ்எஸ் காலனியை பிரித்து அனுப்பானடி, கோச்சடையில் புதியதாக 2 காவல் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதன் மூலம் மதுரை மாநகருக்கு கூடுதல் போலீசார் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் சுதாரிப்பாக இருக்க வேண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விஷயத்தில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உண்டு. உங்களின் கண் முன்பு ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது நமக்கு என்ன என்று பாராமுகமாக செல்வதை விடுத்து நீங்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் குற்றமில்லா மதுரையை உருவாக்க முடியும். 

மதுரை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை. நடப்பாண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 லட்சத்து 91 ஆயிரத்து 202 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் அவர்களிடமிருந்து 7 கோடியே 69 லட்சத்து 27 ஆயிரத்து 115 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்