Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் பொது இடத்திலுள்ள சிலைகள், அனுமதி தந்தோர் விவரம்: ஆட்சியருக்கு கிரண்பேடி உத்தரவு

நவம்பர் 18, 2019 10:43

புதுச்சேரி: ஏனாமில் பொது இடத்திலுள்ள சிலைகள், அதனை அமைக்க அனுமதி தந்தோர், அதற்கான செலவு யார் செய்தது போன்ற விவரங்களை அறிக்கையாக்கித் தர ஆட்சியருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அண்மையில் ஏனாம் சென்று ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். இச்சூழலில் புதுச்சேரி பிராந்தியமான ஏனாமின் எம்எல்ஏவும் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் தந்தை மல்லாடி சூரிய நாராயண ராவ் அண்மையில் மறைந்தார். டெல்லியிருந்து திரும்பிய முதல்வர் நாராயணசாமி நேற்று அவரது சிலையை ஏனாமில் திறந்து வைத்தார்.

இந்நிலையில் ஏனாமிலுள்ள சிலைகள் தொடர்பாக ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (நவ.18) ஆட்சியருக்கு அனுப்பியுள்ள உத்தரவு தொடர்பாக கூறுகையில், "சிலைகள் தனியார் இடத்தில் அமைக்கலாம். புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் சிலைகள் பொது இடத்தில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் அதிக அளவில் புகார்கள் தந்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் பொது இடத்தில் சிலைகள் அமைக்கத் தடை விதித்துள்ளது. ஏனாமில் அமைந்துள்ள சிலைகள் விவரம், அதை வடிவமைக்க எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது, அதற்கு அனுமதி தந்துள்ளோர் யார் ஆகியவை தொடர்பாக விவரம் தேவை. இவ்விவரத்தைப் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்