Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு அமைத்தது

நவம்பர் 23, 2019 04:43

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதல்-மந்திரி பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள்  கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்திக்க உள்ளதாகவும் கூறினார். 

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று காலை பொறுப்பேற்றது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பட்னாஸ் மற்றும் அஜித் பவாருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆட்சியமைப்பதற்கு 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் 105 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்கள் இணைந்து தற்போது ஆட்சியமைத்துள்ளன. 

ஒரே இரவில் இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது என அரசியல் ஆர்வலர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் பாஜகவை ஓரங்கட்ட நினைத்த காங்கிரசும் சிவசேனாவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. 

தலைப்புச்செய்திகள்