Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சாவூர்: ஊர்க்காவல் படை பெண் போலீஸ் மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி

நவம்பர் 23, 2019 04:55

தஞ்சாவூர்: தஞ்சை கோரிக்குளம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சங்கர். பெயிண்டர். இவரது மனைவி நிரோஷா (வயது 21). இவர் ஊர்க்காவல் படையில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ராஜேந்திரன், அவரது மனைவி கல்பனா, மகன் அருண் ஆகியோர் சங்கரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.30 லட்சம் வாங்கி உள்ளனர்.

பின்னர் போலியான விசா கொடுத்து அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் போலி விசாவை பறிமுதல் செய்து சங்கரை திருப்பி அனுப்பி விட்டனர். இதைத்தொடர்ந்து சங்கர், ராஜேந்திரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.

ஆனால் ராஜேந்திரன், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுபற்றி கடந்த 10-8-19 அன்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதுபற்றி விசாரணை நடத்த தஞ்சை தாலுகா போலீசுக்கு உத்தர விடப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நிரோஷா இன்று மதியம் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தனது 2 மகன்கள், மற்றும் தந்தையையும் அழைத்து வந்தார். அப்போது அவர் திடீரென தனது 2 மகன்கள், தந்தை மீதும், மேலும் நிரோஷா தனது உடலிலும் மண்எண்ணையை ஊற்றினார்.

இதை அங்கு நின்ற போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே நிரோஷாவை பிடித்து விசாரித்தனர். அப்போது மோசடி புகார் குறித்து தாலுகா போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் எனது தந்தை, 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்றேன் என்று நிரோஷா தெரிவித்தார். இதைத்தொடர்பாக போலீசார் அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊர்காவல் படை பெண் போலீஸ், மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்