Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது

மார்ச் 02, 2019 06:34

சென்னை: அதிமுக அணியில் சேர விஜயகாந்த் முடிவு செய்து விட்டதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  

பாராளுமன்ற தேர்தல் கூட்டணியில் தே.மு.தி.க. எந்த பக்கம் சாயும் என்பது இழுபறியாக இருந்து வந்த நிலையில் விஜயகாந்த் அ.தி.மு.க. அணியில் சேர திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி இறுதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல்-சபை எம்.பி. பதவியும் அளிப்பது என முடிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே கூட்டணி பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு இணையான இடங்களை தே.மு.தி.க.வுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க.வோ அதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டது. 

இதனால் அ.தி.மு.க. அணியில் சேருவதா? வேண்டாமா? என்று குழப்பமான மனநிலையில் இருந்த விஜயகாந்தை தி.மு.க. பக்கம் இழுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலிக்காமல் போய் விட்டது. 

அ.தி.மு.க. அணியில் சேர விஜயகாந்த் முடிவு செய்து விட்டதால் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. விஜயகாந்த் வருவார் என்று காத்திருந்த அ.தி.மு.க. தலைமை, தே.மு.தி.க.வுக்கு 4 பாராளுமன்ற தொகுதிகளையும், ஒரு மேல்-சபை தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை விஜயகாந்த் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. 

இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இதுநாள் வரையில் திறந்திருந்த கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் முதலிலேயே ஒதுக்கப்பட்டு விட்டது. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், புதிதாக சேர்ந்த ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 40 இடங்களில் (புதுவை உள்பட) 12 இடங்கள் மட்டுமே தி.மு.க. கூட்டணியில் முடிவாகி உள்ளது. 

கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இப்போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சியும் இந்த கூட்டணியில் உள்ளது. புதிதாக பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியும் தி.மு.க. கூட்டணியில் சேர உள்ளது. 

இதன் மூலம் இந்த 6 கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கட்சிகள் அனைத்துக்கும் தலா ஒரு இடம் மட்டுமே ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டிருந்தது. தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க. வந்தால் அந்த கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் வகையில் இந்த எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இப்போது தே.மு.தி.க. வராததால், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய 2 கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க.வும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

2 கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கும் ஒரு தொகுதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்த 6 கட்சிகளுக்கும் 8 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் ஏற்படும். 

இதனால் மீதம் உள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. இன்று முதல் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தைக்கு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரும் இன்று மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணியில் சேர உள்ளார். ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடனும் பேச்சு நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்