Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்டங்களிலும் இனி சைபர் கிரைம் காவல் நிலையம்

நவம்பர் 24, 2019 10:00

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக சைபர் கிரைம் காவல் நிலையம் துவங்கப்படும் என, டி.ஜி.பி.,திரிபாதி தெரிவித்தார்.
தமிழகத்தில், 'சைபர் கிரைம்' எனப்படும், இணைய வழி குற்றங்களை தடுக்கவும், அதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கூடுதல் டி.ஜி.பி., தலைமையில், 'சைபர் அரங்கம்' துவங்கப்பட்டுள்ளது. இதற்கு, 3.70 கோடி ரூபாய், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக காவல் துறையும், சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனமும் இணைந்து, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தோருக்கு, 'ஹேக்கத்தான்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. மேலும், பெருகி வரும் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து, போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 1,348 பேர் பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடித்த குழுவினரை பாராட்டி, டி.ஜி.பி., திரிபாதி பரிசுகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், டி.ஜி.பி., திரிபாதி பேசியதாவது:-

தகவல் தொழில்நுட்பம், பெரியளவில் சகாப்தத்தை ஏற்படுத்தியது. மேலும், நம் வாழ்வின் அங்கமாகவும் மாறியுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்பத்தால், மகத்தான நன்மைகள் இருந்தாலும், இணைய பாதுகாப்பு நமக்கும், தேசத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

இதற்காக, தமிழக அரசு, 'சைபர் அரங்கம்' துவக்கியுள்ளது. இதில், மாணவர்கள், ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்தோர், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதற்கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டன.நிதி மோசடிகள் மற்றும் இணைய வழி மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வருங்காலங்களில், மாவட்ட வாரியாக, 'சைபர் கிரைம்' காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். இதன் வாயிலாக, 'சைபர் கிரைம்' குற்றங்கள் குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்