Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காய்கறி வியாபாரம் செய்யும் எம்.எல்.ஏ. வின் மனைவி

நவம்பர் 27, 2019 07:49

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் பட்காகோன் தொகுதியை சேர்ந்தவர் லோக்நாத் மேக்டோ. 1995, 2000, 2004 ஆகிய வருடங்களில் பட்காகோன் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-. ஆனார். 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர், இந்த முறையும் இதே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

74 வயதான லோக்நாத் மேக்டோ அவருக்கு கிடைத்த எம்.எல்.ஏ. சம்பளத்தை அந்த தொகுதியில் உள்ள ஏழைகளுக்காக பயன்படுத்தினார். ஏழை பெண்களின் திருமணத்தை நடத்தி வைக்கவும் உதவியுள்ளார். பல்வேறு அரசு உதவிகளையும் தொகுதி மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். 2005-ம் ஆண்டு சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான விருதை பெற்றுள்ளார்.

லோக்நாத்மேக்டோ 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தனது குடும்பத்துக்காக சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவருடைய மனைவி மவுலினிதேவி. கணவர் எம்.எல்.ஏ. ஆகும் முன்பே காய்கறி விற்று வந்தார். இன்றும் காய்கறி வியாபாரம் செய்துதான் தனது குடும்பத்தை நடத்துகிறார்.

இதுகுறித்து மவுலினி தேவியிடம் கேட்டபோது, ‘காய்கறி விற்பதுதான் எனது தொழில் நீண்ட காலமாக இதை செய்து வருகிறேன். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் காய்கறி விற்பதை சாதாரணமான தொழில் என்று கருதவில்லை. காய்கறி தோட்டமும் வைத்திருக்கிறேன். எனது கணவரின் வருமானத்தை நான் எதிர்பார்ப்பதில்லை. 

நானே என் குடும்ப செலவை கவனித்துக்கொள்கிறேன். காய்கறி வியாபாரம் செய்வது கவுரவ குறைச்சல் அல்ல’ என்றார். லோக்நாத்மேக்டோ இது பற்றி கூறும்போது, ‘எனது மனைவி காய்கறி வியாபாரம் செய்வதை பெருமையாக கருதுகிறேன். குடும்பத்தை அவர் கவனிக்கிறார். மக்களுக்கு நான் சேவை செய்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்