Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்க இடைத்தேர்தல்: 3 தொகுதிகளையும் கைப்பற்றியது திரிணமூல் காங்கிரஸ்

நவம்பர் 28, 2019 12:53

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த 3 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும்  திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. கடந்த 25-ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள கலியாகஞ்ச், கராக்பூர் சதார் , கரிம்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதன் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில் கலியாகஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் கமல் சந்திர சர்க்காரைக் காட்டிலும் 2 ஆயிரத்து 418 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் தபன் தேப் சின்ஹா வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் பரமாதனந்த ராய் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றிருந்தார். இந்த முறை அவரின் மகள் திரித்தாஸ்ரீயை களமிறக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால், 3-ம் இடத்தையே அவர் பிடித்தார். கராக்பூர் சதார் தொகுதி என்பது பாஜக வசம் இருந்தது. அங்கு பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் எம்எல்ஏவாக இருந்தார். 

தற்போது நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் பிரேமசந்திர ஜாவை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்க்கார் போட்டியிட்டார். இதில் பிரேமசந்திர ஜாவைக் காட்டிலும் 20 ஆயிரத்து 811 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பிரதீப் சர்க்கார் வெற்றி பெற்றார்.

கராக்பூரில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி என்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். தன் கைவசம் வைத்திருந்த ஒரு எம்எல்ஏ தொகுதியை பாஜக இழந்துவிட்டடது.

மூன்றாவது தொகுதியான கரிம்பூரில் பாஜக வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரைக் காட்டிலும் 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிமாலென்டு சின்ஹா ராய் முன்னிலை வகித்த நிலையில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல் முறையாக கலியகஞ்ச் மற்றும் கரக்பூர் தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்