Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரசாத் ஸ்டூடியோ: இளையராஜாவுக்காக திரண்டு வந்த திரையுலகம்

நவம்பர் 28, 2019 03:25

சென்னை: இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டுடியோவில் நுழைய முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் இளையராஜாவை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கோரி இவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் உள்ளது பிரசாத் ஸ்டூடியோ. இளையராஜா கம்போஸிங், ரெகார்டிங் எல்லாமே இங்கேதான் செய்வார். 40 வருஷங்களாக இதுதான் பழக்கம். காலையில் 7 மணிக்கு இங்கு வந்துவிடுவார் இளையராஜா. தன் குடும்பத்தைவிட அதிக நேரம் இளையராஜா இருப்பது இங்குதான். அவரை யாராவது பார்க்க வேண்டும் என்றால்கூட பிரசாத்துக்குபோய் தான் பார்ப்பார்கள்! 

மாத வாடகை நன்றாக இருந்த இந்த நிலை, 7 மாதத்துக்கு முன்பு பிரச்சனையாக வெடிக்க தொடங்கியது. "ஸ்டூடியோவுக்கு மாத வாடகையாக ஒரு தொகையை தந்தால் நல்லா இருக்கும்" என்று பிரசாத் தரப்பு கேட்க, அதற்கும் இளையராஜா சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கைழுத்தாகும்போதுதான், திடீரென "அந்த இடத்தை நாங்க யாருக்கும் தருவதாகஇல்லை.. காலி செய்துடுங்க" என்று இளையராஜா தரப்பிடம் சொன்னதாகவும் செய்திகள் வந்தன. புகார் இதற்கு பிறகுதான் இந்த விஷயம் சீரியஸ் ஆனது. இப்படி திடுதிப்பென்று காலிபண்ண சொன்னா எப்படி? இத்தனை வருஷம் இங்கதானே இருக்கோம், வாடகையும் தரோம்னு சொல்லிட்டோமே என்று இளையராஜாவே நேரடியாக கேட்டும், அந்த இடத்தை ஸ்டுடியோக்காரர்கள் தரவில்லை. அது மட்டுமில்லை.. ராத்திரியோடு ராத்திரியாக, சேர், டேபிள்களை ஸ்டுடியோக்குள்ளும் வைத்து, இனிமேல் நாங்கதான் இங்க வேலை பார்க்க போகிறோம் என்று சொல்லவும், இளையராஜா ஸ்டேஷன், கோர்ட் வரை சென்று புகாரும் தந்தார்.

இந்த விஷயம் கேள்விப்பட்டு, அன்றே பாரதிராஜா கொதித்துபோனார்.. "அவனை வெளியே போக சொல்றதுக்கு யாருக்குமே உரிமை இல்லை" என்று இளையராஜாவுக்கு ஆதரவாக நின்றார். இப்போதும் இந்த பிரச்சனை வெடித்துள்ளது. இளையராஜா பணியாற்றிய ரெகார்டிங் அறை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தால் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டுடியோவில் நுழைய முயற்சித்தனர். பாரதிராஜாவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், பேச்சுவார்த்தை நடத்த இன்று ஸ்டுடியோவுக்குள் நுழைய முயன்றனர். ஆனால், இவர்களை ஸ்டுடியோ வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்

போலீசாரும் விஷயத்தை கேள்விப்பட்டு வந்துவிட்டனர்.. இதைதவிர, தனியார் பாதுகாவலர்களும் விரைந்து வந்து தள்ளுமுள்ளுவை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினர்.. இதனால் ஸ்டுடியோ வாசலிலேயே பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உண்மையிலேயே இளையராஜாவுக்கு அனுமதி வழங்க மறுக்க காரணம் தெரியவில்லை. இந்த ஸ்டுடியோவை அரசியல்வாதி ஒருவர் விலைக்கு வாங்கியதாகவும், அதனால்தான் ஸ்டுடியோவை காலி செய்ய சொல்வதாகவும் சொல்கிறார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும், இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் சேர்க்க மறுத்த சம்பவம் பெருத்த சர்ச்சையையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்