Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிச.5-ம் தேதி: பிரம்மாண்டத்தை காட்ட டிடிவி திட்டம்

நவம்பர் 29, 2019 07:21

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவுநாளான டிசம்பர் 5-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மவுன ஊர்வலம் நடத்துகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னை அண்ணா சாலையில் தொடங்கி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு கட்சியினருடன் மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்துகிறார் தினகரன். அன்றைய தினம் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், மிக பிரம்மாண்ட முறையில் அவர் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளாராம்.

ஜெயலலிதா மறைந்து வரும் டிசம்பர் 5-ம் தேதியோடு மூன்றாண்டு நிறைவடைகிறது. அன்றைய தினம் அதிமுக, அமமுக சார்பில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மவுன ஊர்வலம் தொடர்பான அறிவிப்பை அதிமுகவை முந்திக்கொண்டு நேற்றே டிடிவி தினகரன் வெளியிட்டுவிட்டார்.

ஜெயலலிதா நினைவு நாளை தனது செல்வாக்கை நிரூபிப்பதற்கான சரியான வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் தினகரன். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்களை சென்னைக்கு அழைத்து வந்து மெகா ஊர்வலத்தை நடத்தி தனது செல்வாக்கு சரியவில்லை என்பதை வெளிப்படுத்த இருக்கிறாராம்.

ஜெயலலிதா நினைவுநாளில் முதலில் அஞ்சலி செலுத்த இருப்பது அதிமுக. அவர்களுக்கு நேரம் ஒதுக்கியது போக காலை 11 மணிக்கு அமமுகவுக்கு காவல்துறையினரால்  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10.30 மணிக்கு தொடங்கும் மவுன ஊர்வலம் சுமார் 2 கி.மீ.தூரம் வரை இருக்க வேண்டும் என விரும்புகிறாராம் டிடிவி.அமமுக கட்சி இன்னமும் வலுவுடன் தான் இருக்கிறது என்பதை இந்த நினைவுநாள் ஊர்வலம் மெய்பிக்கும் என்கின்றனர் அமமுகவினர்.

தலைப்புச்செய்திகள்