Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் சர்புதீன் என்பவரை கைது செய்தது என்.ஐ.ஏ

நவம்பர் 30, 2019 07:48

திருச்சி : திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சர்புதீன் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கத்தின் சமூக வலைதள பக்கத்துக்கு லைக் செய்ததாக சர்புதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். இன்று காலை 7 மணியளவில் தீவிரவாத இயக்கங்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து சர்புத்தீன் வீட்டில் சோதனை நடைபெற்றது.

திருச்சி, தஞ்சையில் 2 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன். வேலைக்காக இவர் நாளை வெளிநாடு செல்ல இருந்தார். இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு கோவையில் இருந்து 3 என்ஐஏ அதிகாரிகள் சர்புதீன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த சர்புதீன் மற்றும் குடும்பத்தினரிடம்  என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சர்புதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். 

முஸ்லிம் அமைப்பினரின் சமூகவலைதளங்களை கண்காணிப்பதற்காக எஸ்ஐயு என்ற பிரிவு உள்ளது. இந்த பிரிவு சர்புதீனின் வாட்ஸ்அப் தொடர்புகளை கண்காணி்த்த போது, அவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினருடன் தகவல் பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்று விசாரணை நடந்து வருகிறது. மேலும் சர்புதீன் நாளை வெளிநாட்டுக்கு செல்ல இருந்தார். எனவே அல்கொய்தா அமைப்பினருக்கு ஏதேனும் தகவல் அல்லது பொருட்கள் கொண்டு செல்கிறாரா என்று விசாரணை நடந்து வருகிறது.

அதேபோல் தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். இவர் வீட்டின் ஒரு பகுதியில் செருப்பு விற்பனை கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் இன்று காலை சோதனை நடத்தினர். இவர் ஏற்கனவே சிமி தீவிரவாத அமைப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்போதும் அந்த இயக்கத்துடன் தொடர்பில் உள்ளாரா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்