Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு மோசடி வழக்கு: தொழிலதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நவம்பர் 30, 2019 08:17

மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கில் சென்னை தொழிலதிபரின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. அவர், விசாரணை அதிகாரி முன் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்ட மோசடி வழக்கு தொடர்பாக, சென்னை, கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் (19), இவரது தந்தை தொழிலதிபர் ரவிக்குமார் (61) ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேனி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘ரிஷிகாந்திற்காக வேறொருவர் நொய்டாவில் தேர்வு எழுதியுள்ளார். அவரது கைரேகையும், ரிஷிகாந்தின் கைரேகையும் வேறுபடுகிறது. ஆள் மாறாட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றார். அப்போது நீதிபதி, ரவிக்குமாரை நேரில் அழைத்து விசாரித்தார். பின்னர், ‘ரவிக்குமார் சிபிசிஐடியில் சரணடைவதாகவும், 60 நாட்களுக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்ய மாட்டேன் எனவும் உறுதி அளித்தால் அவரது மகனுக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்றார். இதையடுத்து ரவிக்குமார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மாணவர் ரிஷிகாந்திற்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும். அதே நேரம் இந்த நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் எந்த குற்றமும் செய்யவில்லை எனக்கூறியதால், ரவிக்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் டிச.3ம் தேதி விசாரணை அதிகாரி முன் சரணடைய வேண்டும். அன்று முதல் 60 நாள் முடியும் வரை ஜாமீன் கோரி மனு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்