Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டியவர் மீது வழக்கு

நவம்பர் 30, 2019 02:29

நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள குத்தாலம் புதுசாலிய தெருவை சேர்ந்தவர் ரமணி (60). சமையல் வேலை செய்து வருகிறார். இவர் குத்தாலம் கடைவீதியில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசி 20 கிலோவை வாங்கினார். அந்த அரிசியை வாங்கி கொண்டு சென்ற அவர், சிறிது தூரம் சென்றவுடன், சைக்கிளை நிறுத்திவிட்டு அரிசி மூட்டையை அவிழ்த்து சாலை ஓரத்தில் நடந்தபடியே கீழே கொட்டினார். இதைக் கண்ட ஒரு பெண், ஏன் இதை கொட்டுறீங்க என்று கேட்டதற்கு, அரிசி என்ற பெயரில் குண்டரிசி கொடுக்குறான். அதை சாப்பிட முடியுமா, சோறு வடிச்சி, மனுஷன் சாப்பிட முடியாது. ஆடு, மாடாவது திங்கட்டுமுன்னுதான் ரோட்டுல கொட்டிவிட்டேன் என்று கூறினார்.

அவரது செயலை வீடியோ எடுத்த நபர் ஒருவரை பார்த்து, எடுத்து விட்டியாடா வாட்ஸ்அப்பில் அனுப்பு என்று கூறி சென்றுவிட்டார்.  இந்த செய்தி நேற்று தமிழ் முரசு நாளிதழில் படத்துடன் வெளியானது. இதுகுறித்து குத்தாலம் வட்ட வழங்கல் அலுவலர் குறிப்பிட்ட ரேஷன்கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த செயலை செய்தவர்மீது நடவடிக்கை எடுக்க கோரினார். இதையடுத்து ரேஷன் கடை ஊழியர் அறிவழகன் நேற்று மாலை குத்தாலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், அரசின் இலவச திட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் அரிசியை தரையில் கொட்டியும், அரசு பணி செய்பவர்களை அவமானப்படுத்தியும், இதுபற்றி கேட்டதற்கு மிரட்டலும் விடுத்தார். எனவே ரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமணியை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்