Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிரா: காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோல் சபாநாயகராக போட்டியின்றித் தேர்வு

டிசம்பர் 01, 2019 08:13

மும்பை: மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த பாஜக எம்எல்ஏ கிஷான் கதோர் மனுவை வாபஸ் பெற்றதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோல் சபாநாயகராகப் போட்டியின்றித் தேர்வாகிறார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார். எம்எல்ஏக்களுக்குப் பதவி ஏற்பு செய்து வைப்பதற்காக பாஜக மூத்த உறுப்பினர் காளிதாஸ் கோலம்பர் இடைக்கால சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

காளிதாஸ் கோலம்பர்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூடி, சபாநாயகரை மாற்றி, என்சிபி கட்சியைச் சேர்ந்த திலீப் பாட்டிலை நியமித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை திலீப் பாட்டீல் சபாநாயகராக இருந்து நடத்தினார். ஆனால், கோலம்பரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கியதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூடிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜக சார்பில் எம்எல்ஏ கிஷான் கதோர், காங்கிரஸ் சார்பில் நானோ படோல் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனால் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாஜக வேட்பாளர் கிஷான் கதோர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து போட்டியின்றி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ நானா படோல் சபாநாயகராகத் தேர்வாகிறார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், " பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு கிஷான் கதோரை வேட்பாளராகக் களமிறக்கி இருந்தோம். ஆனால், நேற்று சில வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதால், கதோர் வாபஸ் பெற முடிவு எடுத்தோம்" எனத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்