Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு சேலத்தில் இயற்கை எரிவாயு திட்டப்பணிகள் தொடக்கம்:

டிசம்பர் 01, 2019 10:10

சேலம்: சேலத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இரும்பாலையில் நவீன மையம் ஏற்படுத்த குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உலக அளவில் அதிகளவு மாசு அடைந்துள்ள முதல் 15 நகரங்களின் பட்டியலில், இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நகர எரிவாயு விநியோக திட்டத்தை (சிஜிபி) தொடங்கியுள்ளனர்.

உலக நாடுகள்,23.4 சதவீதம் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் 6.2 சதவீதம் மட்டும் இயற்கை எரிவாயு பயன்பாட்டில் இருக்கிறது. மாநிலங்களின் அடிப்படையில் பார்த்தால், குஜராத் மற்றும் டெல்லியில் மட்டும் 25 சதவீதம் இயற்கை எரிவாயு பயன்பாடு உள்ளது. மற்ற மாநிலங்களில் 5 சதவீதத்திற்கும் கீழ் தான், உள்ளது. நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் இந்த இயற்கை எரிவாயுவை சேமித்து, வீட்டு காஸ் இணைப்பு, வாகன எரிபொருள், தொழிற்சாலை பயன்பாடு போன்றவற்றிற்கு பயன்படுத்தி காற்று மாசு அளவை வெகுவாக குறைத்திட நகர எரிவாயு விநியோக திட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு அறிவித்தது. 

2008ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு நகரங்களாக இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்தும் பகுதியாக மாற்றி வருகிறது. இதுவரையில் நாடு முழுவதும் 402 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,கோவை,சேலம், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.இத்திட்டத்திற்காக ₹20 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 

சேலம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் எடுத்து செய்கிறது. ₹1,300 கோடியில் 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இதுபோக பெட்ரோல் பங்க்குகளில், இயற்கை எரிவாயு நிரப்பும் மையங்களை தனியாக ஏற்படுத்தவுள்ளனர். தொழிற்சாலைகள்,வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் இணைப்புகளை வழங்கி காற்று மாசை குறைக்க திட்டமிட்டுள்ளனர். 

இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணி தற்போது, சேலம் இரும்பாலை பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு நவீன முறையில் இயற்கை எரிவாயுவை பிரித்து அனுப்பும் பெரிய அளவிலான மையம் ஏற்படுத்துகின்றனர். அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம் அங்கீகரித்த சிறப்பு தர எஃகு குழாய் பயன்படுத்தப்படுகிறது. வழித்தடத்தில் இயக்க அழுத்தத்தை 100 சதவீதத்திற்கும் அதிகமாக தாக்குப் பிடிக்கும் தன்மை கொண்ட இக்குழாயை பூமிக்கடியில் 1.2 மீட்டர் ஆழத்தில் பதிக்கின்றனர். 

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் நகர எரிவாயு விநியோக திட்டத்தில் 3 லட்சம் வீடுகள் மற்றும் 158 பெட்ரோல் பங்க்குகளில் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை முழுமையாக முடிக்க இன்னும் 7 ஆண்டுகள் ஆகும். தற்போது, இரும்பாலையில் ஏற்படுத்தப்படும் நவீன மையத்திற்கு சென்னை மற்றும் கொச்சியில் இருந்து இயற்கை எரிவாயுவை கொண்டு வர ஏற்பாடுகளை செய்கிறோம்.

அவசரநிலை காலங்களில் இயற்கை எரிவாயு சப்ளையை நிறுத்திக் கொள்ள ஒவ்வொரு 3 கி.மீ.,க்கும் இடையில் வால்வு அமைக்கப்படுகிறது. சேலத்தில் முதலில் பெட்ரோல் பங்க்குகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படவுள்ளது. அங்கு, வாகனங்களுக்கு நிரப்ப தனி மையங்களை ஏற்படுத்தவுள்ளனர். பெட்-கோக் மற்றும் பர்னெஸ் ஆயில் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இயற்கை எரிவாயுவிற்கு மாறினால்,அதிகளவு காற்று மாசு குறையும் என்பதால்,அந்த ஆலைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்