Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குரூப் -2 தேர்வு: அவிநாசி மாணவி மாநில முதலிடம்

டிசம்பர் 01, 2019 11:35

கோவை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில், அவிநாசி மாணவி, மாநில அளவில் முதல் ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார். கடந்தாண்டு, நவ., 11ல், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு நடந்தது. இரு நாட்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி காமராஜர் வீதியை சேர்ந்த சுபாஷினி, 22, மாநில அளவில் முதல் ரேங்க் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளார். அவர், 340க்கு 210.5 மதிப்பெண் பெற்றார்.

கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில், எம்.ஏ., பொருளாதாரம், இறுதியாண்டு படிக்கும் சுபாஷினி கூறியதாவது:- பள்ளியில் படிக்கும் போதே, அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்ற, ஆசை இருந்தது. 11, 12ம் வகுப்பில், உயிரியல், கணிதம் பாடத்தை தேர்வு செய்து படித்த போதும், போட்டி தேர்வு எழுதும் நோக்கில், கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரம் தேர்வு செய்தேன்.கல்லுாரி முதல் ஆண்டில் இருந்து போட்டி தேர்வுக்கு தயாராக துவங்கினேன். வார விடுமுறை நாட்களில், தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு சென்று, போட்டி தேர்வு எதிர்கொள்வதற்குரிய ஆலோசனை பெற்றேன்.

தேர்வுக்கு எதையெல்லாம் படிக்க வேண்டும் என்பதையும் அறிந்துக் கொண்டேன். தினசரி, கல்லுாரி படிப்புடன் சேர்த்து, போட்டித் தேர்வுக்கும் தயராகி வந்தேன். அதன் விளைவாக, குரூப் - 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். நகராட்சி கமிஷனர் பணியிடம் தேர்வு செய்யும் எண்ணத்தில் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

சுபாஷினியின், தந்தை வடிவேல், அவிநாசி அருகேயுள்ள திம்மணையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றுகிறார். தாய், தனபாக்கியம்; ஈரோடு மாவட்டம் தாளவாடியில், வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

தலைப்புச்செய்திகள்