Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து முகமூடி கும்பல் கொள்ளை முயற்சி

டிசம்பர் 01, 2019 01:29

திருச்சி: குளித்தலையை அடுத்த நெய்தலூரில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி உள்ளது. வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையமும் அமைக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்து விட்டு செல்வது வழக்கம்.

அதுபோல் இன்று அதிகாலை 1 மணியளவில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இஸ்திரிஸ் மற்றும் போலீசார் வாகனத்தில் நெய்தலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை பார்வையிட சென்றபோது திடீரென வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் வெளியே ஓடிவந்தனர்.

மேலும் அங்கு தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றனர். அவர்களை போலீசார் பிடிக்க முயல்வதற்குள் காரில் வேகமாக சென்று விட்டனர். இதையடுத்து வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் போலீசார் சென்று பார்வையிட்ட போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் வந்த 2 நபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருக்கும் போது போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து காரில் தப்பி சென்றது தெரிய வந்தது.

அவர்களை பிடிக்க குளித்தலை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரின் உருவங்களும் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்