Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குட்கா முறைகேடு: பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு எஸ்.பி ஆஜர்

டிசம்பர் 02, 2019 07:59

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் 12 காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு எஸ்.பி விமலா அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜராகி உள்ளார். காவல்துறை அதிகாரி விமலா ஐ.பி.எஸ்.சிடம் சென்னை அமலாக்கத்துறை அலுவகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட குட்கா விற்க லஞ்சம் வாங்கியதாக காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. முன்னாள் காவல்துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனையும் நடைபெற்றது. கடந்த 2016ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட போது ஒரு முக்கியமான ஆதாரமாக டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. 

அதில் குடோன் செயல்பட உரிமையாளர் மாதவராவ், காவல்துறை, சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனைகளையும் மேற்கொண்டது. முதற்கட்டமாக அமலாக்கத்துறை 12 காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இன்றும், நாளையும் 12 காவல்துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் தற்பொழுது பொறுப்பில் இருக்கக்கூடிய பல காவல்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

இந்த 12 பேரும் இன்றும், நாளையும் ஒவ்வொருவராக ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக இருக்கும் விமலா ஆஜராகியுள்ளார். இவர், குட்கா முறைகேடு நடத்த காலகட்டத்தில் மாதவரம் துணை ஆணையராக பொறுப்பேற்றிருந்தார். அதன்பிறகு நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராக பொறுப்பு வகித்தார். தற்போது, இவர் நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜராகியுள்ளார். இன்னும் பல காவல்துறை அதிகாரிகள் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்