Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பசிக்கொடுமையால், மண்ணை அள்ளி தின்ற குழந்தைகள்: தாயாருக்கு வேலை வழங்கிய அரசு

டிசம்பர் 03, 2019 10:08

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்களில் பரவிய ஒரு  வீடியோ காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

அந்த வீடியோ காட்சியில் 2 குழந்தைகள் பசிக் கொடுமையால் அழுதபடி தரையில் கிடந்த மண்ணை அள்ளித் தின்றுகொண்டிருந்தன. இதுபற்றிய தகவல் திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதை  விசாரித்தபோது குழந்தைகள் மண்ணை அள்ளித்தின்ற இடம் திருவனந்தபுரம் கைதமுக்கு ரெயில்வே புறம் போக்கு பகுதி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது  ஸ்ரீதேவி என்ற ஏழை பெண்ணின் குழந்தைகள் தான் அவர்கள் என்பது தெரியவந்தது.ரெயில்வே புறம்போக்கு இடத்தில் குப்பைக்கூழங்கள் நிறைந்த பகுதியில் தார் பாயால் தடுப்பு அமைத்து வசித்து வந்த ஸ்ரீதேவிக்கு  மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தைக்கு 7 வயது ஆகிறது. கடைசி குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆகியிருந்தது.

ஸ்ரீதேவியின் கணவர் குஞ்சுமோன் மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் கூலி வேலை மூலம் கிடைக்கும் பணத்தை அவர்  ஸ்ரீதேவியிடம் கொடுப்பது இல்லை. இதனால் தாயும், குழந்தைகளும் பல நாட்களாக பசியால் வாடி, வதங்கி வருகிறார்கள். 3 மாத  குழந்தைக்கு தாய்பால் கொடுக்கக்கூட முடியாத அளவுக்கு ஸ்ரீதேவியின் உடல்நிலை இருந்தது.

இதனால் பசியால் வேறு வழியில்லாமல் அவரது குழந்தைகள் மண்ணை அள்ளி தின்றுள்ளன. திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமாருக்கு  இந்த தகவல் தெரியவந்ததை தொடர்ந்து அவரும் அங்கு சென்று ஸ்ரீதேவிக்கு உதவ முன்வந்தார். அவரது 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் தாயின் அனுமதியுடன் அரசு காப்பகத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 குழந்தைகளும் மிகவும் சிறுவயது என்பதால் தாயின் பராமரிப்பு அவசியம் கருதி அவரிடம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கும் ஏற்பாடு செய்தார். மாநகராட்சி குடியிருப்பில் ஸ்ரீதேவி குழந்தைகளுடன்  வசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபற்றி ஸ்ரீதேவி கூறும் போது, கணவர் குடித்துவிட்டு செலவுக்கு பணம் தராததால் தன்னால்  குழந்தைகளின் பசியாற்ற முடியவில்லை என்றும், அரசு உதவி தனக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றும்  கண்ணீருடன் கூறி உள்ளார். கேரள மந்திரி சைலஜாவும் ஏழை பெண் ஸ்ரீதேவிக்கும், அவரது குழந்தைகளுக்கும் அரசு உதவிகள்  கிடைக்க உத்தரவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்