Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாந்தா குழுமத்துக்கு தினசரி ரூ. 5 கோடி நஷ்டம்

மார்ச் 03, 2019 10:12

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேதாந்தா குழுமத்துக்கு தினசரி ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்தது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 

இதைத் தொடர்ந்து மே மாதம் 28-ம் தேதி இந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இந்த ஆலை மூடப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தினசரி ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆலை மூடப்பட்டதிலிருந்து இதுவரை இந்நிறுவனத்துக்கு ரூ. 1,380 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 9 மாதங்களாக ஆலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதமே இந்த ஆலை ஓராண்டு மூடப்பட்டால் 10 கோடி டாலர் நஷ்டம் ஏற்படும் என்று குழுமத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்திருந்தார். 

ஆலையை மீண்டும் திறக்கலாம் என கடந்த டிசம்பரில் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்து ஆலையை மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. 

நீதிமன்றங்களில் சட்டரீதியாக போராடி வருகிறது வேதாந்தா குழுமம். ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில் அரசியல் ரீதியாகவும் பிரச்சினை உள்ளது. மக்களவைத் தேர்தல் மே மாதம் நடைபெறலாம் என்பதாலும் முக்கிய கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாலும் பிரச்சினை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் தேர்தலுக்கு முன்பாக இந்த ஆலை திறப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே தோன்றுகிறது.

தலைப்புச்செய்திகள்