Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ. மாநில துணை தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்

டிசம்பர் 05, 2019 09:31

சென்னை: தமிழக பா.ஜனதாவின் மாநில துணைத் தலைவர் பதவி வகித்து வந்தவர் பி.டி.அரசகுமார் திமுகவில் இணைந்தார். சமீபத்தில், புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அரசகுமார், விழாவுக்கு தலைமை தாங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

அப்போது “எம்.ஜி.ஆருக்குப் பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான். நான், இந்த இயக்கத்துக்கு நன்றிக் கடன் பட்டவன். காலம் கனியும். காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதைப் பார்த்து நாம் அகமகிழ்ச்சி அடைவோம். நான் ஏற்கனவே தி.மு.க. கரை வேட்டி கட்டியவன். எப்போது வேண்டுமானாலும் கட்டிக் கொள்வேன்” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து அரசகுமார் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. அரசகுமார் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயல். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய தலைமையில் இருந்து பதில் வரும்வரை அவர் பா.ஜனதாவின் சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது. ஊடக விவாதங்களிலும் பங்கேற்க கூடாது என்று பா.ஜனதா மாநில செயலாளர் நரேந்திரன் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், அரசகுமார் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வை கட்டிக் காத்த கலைஞர், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இதே அறிவாலயத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடமாடி இருக்கிறேன். என் தாய் இல்லமான தி.மு.க.வில் இணைந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்.

புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் உண்மையை பேசினேன். அதற்காக கடந்த 2, 3 நாட்களாக என்னை அசிங்கமாக திட்டி தீர்த்து விட்டனர். அச்சுறுத்தலும் வந்தன.எனவே, தி.மு.க.வில் இணைய முடிவு செய்தேன். இன்று தளபதியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தேன். இதற்காக நான் தீவிரமாக உழைப்பேன் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்