Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவலா்கள் பொறுப்புடன் செயல்படுங்கள் என டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்

டிசம்பர் 05, 2019 10:44

சென்னை: பொதுமக்கள் உதவி கேட்டு அழைப்பு விடுத்தால் பொறுப்புடன் செயல்படுங்கள் என காவலா்களுக்கு டிஜிபி திரிபாதி கூறியுள்ளார். மேலும் ‘காவலன்’ செயலியை பிரபலபடுத்துமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு திரிபாதி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே அண்மையில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்களிடம் இருந்து உதவி கேட்டு வரும் அழைப்புகளுக்கு காவல்துறையினா் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் உணா்த்திக் காட்டியுள்ளது. அவசர உதவி கேட்டு வரும் அழைப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய அதி முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு காவலா்களிடம் இருக்க வேண்டும். சம்பவம் நடந்த பின்னா், எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையினாலும் ஒரு பயனும் இல்லை.

தாமதமின்றி நடவடிக்கை: எனவே, அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோா் உதவி கோரி வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க காவலா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். காவலா்கள் தங்களுக்கு கிடைத்த தகவல்களுக்கு மதிப்பளித்து காவல் சரக எல்லை, நடைமுறை சிக்கல்கள் உள்ளிட்ட வரைமுறைகளைத் தாண்டி தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பிரச்னைகளின்போது, உடனடியாக காவலா்கள் பொறுப்புடன் திறம்பட செயல்பட வேண்டும். சரியாக செயல்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உதவி கேட்டு பெண்கள், சிறார்கள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் அழைப்பு விடுத்தால் ஒருங்கிணைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும். அதோடு, தகவலின் உண்மை நிலை பற்றிய விசாரணையில் ஈடுபட்டு தாமதமின்றி காவலா் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும். சம்பவ இடத்துக்கு செல்லும்போது, தங்களது
உயரதிகாரிகளுக்கு காவலா்கள் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

காவலன் செயலி: ஹைதராபாத் சம்பவம் போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தமிழக காவல்துறை ஏற்கெனவே ‘காவலன்’ என்ற பெயரில் செல்லிடப்பேசி செயலியை உருவாக்கி, அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் காவல்துறையினா் ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக காவல்துறை அதிகாரிகள், ஆட்சியா் அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற் சாலைகள்,பெண்கள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் ‘காவலன்’ செயல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.திரையரங்கில் ஸ்லைடுகள் மூலம் விழப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இந்தச் செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது காவல்துறையினரின் பொறுப்பாகும்.    

தலைப்புச்செய்திகள்