Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் இல்லம் அருகே கலாட்டா: காரில் வந்த நபர் யார்?

டிசம்பர் 07, 2019 08:00

சென்னை: சென்னையில் அதிகாலையில் அமைச்சர் இல்லம் அருகே கலாட்டா செய்த நபர் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து ஓடிவிட்டதால் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் விவிஐபிக்கள் குடியிருக்கும் முக்கிய சாலை பசுமை வழிச்சாலை ஆகும். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் அமைந்துள்ள இங்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் இன்று அதிகாலை காரில் வந்த நபர் ஒருவர் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இல்லம் அருகில் சாலையில் நின்றுகொண்டு போனில் சத்தமாகப் பேசிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு முதல்வர் இல்ல நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் நின்ற காவலர்கள் அந்த நபரிடம் சென்று முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் வசிக்கும் பாதுகாப்பு மிகுந்த இடம் அதனால் இங்கு காரை நிறுத்தக்கூடாது என்று தெரிவித்து அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த நபர் அங்கிருந்து செல்லாமல் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அவரது சட்டை கிழிந்துள்ளது. அப்போது பேட்ரோல் ஜீப் அங்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த நபர் போலீஸாருக்கு சவால் விட்டபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நபர் குறித்து பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் கொடுத்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீஸார், பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்