Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ: 4 பேர் கைது

டிசம்பர் 08, 2019 06:46

உடையார்பாளையம்: அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டி மடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனக்காடுகள் உள்ளன. இந்த காடுகளில் மான், முயல், மயில், உடும்பு உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 

இந்த நிலையில் வன விலங்குகளை சிலர் வேட்டையாடி அதை சமைத்து சாப்பிடுவதுபோல், சமூக வலை தளங்களில் (யூ-டியூப்) வெளியிட்டு வருவாய் ஈட்டி வருவதாக மாவட்ட போலீசாருக்கும், மாவட்ட வனத்துறையினருக்கும் புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று காலை மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனக்காவலர்கள் உடையார்பாளையம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை வனக்காடுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் காட்டுப்பகுதிக்குள் சென்றதை பார்த்தனர்.

பின்னர் அவர்களை, வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(வயது 37), சுப்பிரமணியன்(33), கார்த்திக்(29), அலெக்ஸ் பாண்டியன்(24) ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிடுவது போல், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வருவாய் ஈட்டியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து அவர்களை வனத்துறையினர் அரியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், மடிக்கணினி மற்றும் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்