Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மறைமுக தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு

டிசம்பர் 09, 2019 10:02

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் நடத்தும் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மறைமுக தேர்தலின் படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க மாட்டார்கள். மாறாக வார்டு கவுன்சிலர்கள் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் நடத்தும் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், மறைமுக தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்