Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகின் பாலியல் பலாத்கார தலைநகராகி விட்டது இந்தியா: ராகுல் காந்தி

டிசம்பர் 10, 2019 05:36

ராஞ்சி :ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடந்து வருகிறது. இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பிரசாரம் நடந்து வருகிறது. அவற்றில் ஒன்றான, பர்காகான் தொகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இப்போதெல்லாம் பெண்கள், வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள். அவர்கள் எரிக்கப்படுகிறார்கள் அல்லது சுடப்படுகிறார்கள். ஆனால், இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனமாக இருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு அந்த பெண் மீது விபத்து ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி அமைதி காக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தும் அவர் அமைதி காப்பது ஏன்? இத்தகைய சம்பவங்களால், உலகின் பாலியல் பலாத்கார தலைநகராக இந்தியா ஆகிவிட்டது. பிரதமர் மோடி, ஜார்க்கண்டுக்கு வரும் போதெல்லாம், விவசாயிகளை பாதுகாப்போம் என்று கூறுகிறார். ஆனால், விவசாயிகளை பாதுகாப்போம் என்று பிரதமர் மேடையில் இருந்து பேசுகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் 15 கார்ப்பரேட் நிறுவனங்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை. அண்டை மாநிலமான சத்தீஷ்காரில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உள்ளது. ஆனால், ஜார்க்கண்டில் ரூ.1,300 மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இங்கும் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும். மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நீர், வனம், நிலம் ஆகியவை உரியவர்களிடமே ஒப்படைக்கப்படும் என ராகுல் காந்தி பேசினார்.

தலைப்புச்செய்திகள்