Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

டிசம்பர் 10, 2019 07:47

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

அதன்படி 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கலுக்கு வருகிற 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். 17-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 19-ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம்.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவிட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவோர் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். அடுத்தடுத்து தேர்தல்களில் இவர்கள் தாக்கல் செய்யும் சொத்து பட்டியல்களை அதிகாரிகள், வருமான வரித்துறையினர் கண்காணிப்பார்கள்.

சொத்து பட்டியலை தாக்கல் செய்யும் நடைமுறை தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் அமலுக்கு வந்துள்ளது. வேட்பு மனுவுடன் சொத்து மற்றும் வழக்கு விவரங்களை தெரிவிக்கும் 3-ஏ என்ற உறுதிமொழி படிவமும் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை விவரம் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

தனக்கும், குடும்பத்தினர் பெயர்களிலும் இருக்கும் சொத்துக்கள், விவசாய நிலங்கள், இதர சொத்துக்கள், வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்கள், முதலீடுகள், பண இருப்பு உள்ளிட்டவைகளை முழுமையாக கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டுமின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரும் சொத்து விவர பட்டியலை நோட்டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியானோர் முன்னிலையில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பத்திரங்களை வேட்புமனுவுடன் இணைக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் சுய உறுதி மொழியுடன் மனுக்களை தாக்கல் செய்யலாம். மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் உத்தரவால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்த அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்