Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை-

டிசம்பர் 12, 2019 07:40

சிவகாசி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மேலும் ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளில் தலைவர் பதவி ஏலம் விடப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கோட்டைப்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று இரவு கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராமசுப்பு, ராம்குமார், சுப்புராஜ் உள்ளிட்ட சிலர் ஒருவர் பெயரை தலைவர் பதவிக்கு கூறினர்.
அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சதீஷ்குமார் (வயது 25), எங்களை ஏன் கூட்டத்திற்கு அழைக்கவில்லை? நீங்களாக கூட்டம் நடத்தி முடிவு எடுப்பதா? என கேள்வி எழுப்பினார். 
இது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உள்ளாட்சி தலைவர் பதவியை ஏலம் விடக்கூடாது என்றும் கூட்டத்தில் சதீஷ் குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். ராமசுப்பு கோஷ்டியினர், சதீஷ் குமாரை சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சதீஷ் குமாரின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அதற்குள் இறந்து விட்டார். 

இந்த சம்பவம் கோட்டைப்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி விசாரணை நடத்தி ராமசுப்பு, முத்துராஜ், செல்வராஜ், சுப்புராம், கணேசன் உள்பட 7 பேரை கைது செய்தார். மேலும் ராம்குமார் உள்ளிட்ட சிலரை தேடி வருகிறார். கைது செய்யப்பட்ட ராமசுப்பு கோட்டைப்பட்டி பகுதி அ.தி.மு.க. கிளைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்