Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூடாது கூடாது கோயிலை இடிக்கக்கூடாது: கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு

டிசம்பர் 12, 2019 07:57

கரூர்: முதலைப்பட்டி குளக்கரையில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலை இடிக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான குளத்து கரைப்பகுதியில் செல்லாயி அம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் குளக்கரையில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கருவறையை தவிர்த்து அனைத்து பகுதிகளையும் இடித்து அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும் முதலைப்பட்டி கிராமமக்கள் கோவிலை இடிக்க சம்மதிக்கவில்லை. 

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட முதலைப்பட்டி பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி குளித்தலை உதவி கலெக்டர் அப்துல்ரகுமான் தலைமையில் அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்து விட்டு சென்றனர். கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலைப்பட்டி கிராமமக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை ஒப்படைப்பதற்காக முதலைபட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தநிலையில் முதலைப்பட்டி குளக்கரையில் உள்ள கோவிலை இடிக்க கூடாது என கூறி கிராமமக்கள் கோவில் வளாகத்தில் கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்ணீர் விட்ட மக்கள்: இந்த போராட்டம் குறித்து கிராமமக்கள் கூறுகையில் எங்களுக்கு காவல் தெய்வமாக உள்ள செல்லாயி அம்மன் கோவிலை இடிக்கக்கூடாது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் காலஅவகாசம் வேண்டும் என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்