Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம்

மார்ச் 04, 2019 07:31

சென்னை: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு  நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார்.  
 
இந்நிலையில், ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் இந்த திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷா என்கிற திருநங்கை உள்பட 32 பேரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவிக்கான சான்றிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்கள், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங்களையும் சேர்த்து 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயனடைவார்கள். ரூ.2 ஆயிரம்  அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.  

இதை அடுத்து சேலம் சூரமங்கலம் பேருந்து நிலையத்தில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கு, சேலம் மாநகராட்சியில் முடிவுற்ற 307 சாலைகள் சீரமைப்பு திட்டம்,  கோட்டை பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தலைப்புச்செய்திகள்