Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12 கிராமங்கள். 4,700 ஏக்கர் நிலம்: காஞ்சிபுரத்தில் புதிய விமான நிலையம்

டிசம்பர் 13, 2019 01:43

சென்னை: புதிய விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் 12 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 4,700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இந்திய விமான ஆணையம் தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறது. இதற்காக சுமார் 2,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என இரண்டு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நாளில் மட்டும் சுமார் 250 விமானங்கள் வந்து செல்கின்றன. ஆண்டுக்குச் சுமார் இரண்டு கோடி பேர் பயன்படுத்தும் இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 

ஆனால், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் சென்னைக்கு அருகிலேயே விமான நிலையம் அமைக்க பல வருடங்களாக இந்திய விமான ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது காஞ்சிபுரம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

ஆனால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் அப்படியே கைவிட்டது அடுத்து வந்த பா.ஜ.க அரசு. இந்த நிலையில் கடந்த வருடம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கம் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். விமான நிலையம் அமைப்பதற்காக 2,000 ஏக்கர் நிலம் சர்வே செய்யப்பட்டது. ஆனால், எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம் ஆகிய கிராமங்களும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மாகதேவிமங்கலம், அக்கமாபுரம், சிங்கல்பாடி, ஏகனாபுரம் ஆகிய 12 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 4,700 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் துறையினர் ஆய்வு செய்து அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

தலைப்புச்செய்திகள்