Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

50 பைசாவுக்காக நோட்டீஸ்: கடமை தவறாத வங்கி அதிகாரிகள்

டிசம்பர் 15, 2019 09:55

ராஜஸ்தான்: 50 பைசா கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி அளித்துள்ளது.

ராஜஸ்தானின் ஜூன்ஜூனு என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா சிங். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டிற்கு, இரவு நேரத்தில் சென்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி அதிகாரிகள், 50 பைசா கடனை திருப்பி செலுத்தாததால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒட்டினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை வினோத் சிங், 50 பைசாவை திருப்பி செலுத்த வங்கிக்கு சென்றார். ஆனால், அந்த காசை வாங்க மறுத்து அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.

இது தொடர்பாக வினோத் சிங் கூறுகையில், எனது மகன் ஜிதேந்திர சிங்கிற்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால், கடனை திருப்பி செலுத்தவதற்காக நடந்த லோக் அதாலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே நான் வந்தேன். ஆனால், பணத்தை வாங்க மறுத்த அதிகாரிகள், அங்கிருந்து சென்றுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

வினோத் சிங் வழக்கறிஞர் விக்ரம் சிங் கூறுகையில், 50 பைசா கடனை தரவில்லை எனக்கூறி, வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால், கடனைதிருப்பி செலுத்திவிட்டு, தடையில்லா சான்று வாங்க, எனது கட்சிகாரர் வங்கியை அணுகிய போது, பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். வங்கி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்