Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்கள் மீது விழும் அடி, கருத்துரிமை மீது விழும் அடி: கமல்ஹாசன் பேச்சு

டிசம்பர் 17, 2019 10:16

சென்னை: பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது. மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அதேபோல், டெல்லி, அலிகார், உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பல்வேறு அரசியல் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்; குடியுரிமை சட்டத்தை திருத்துவதற்கான அவசரம் என்ன?. கேள்விக்கு பதில் தராமல் கேள்வி கேட்பவர்களை அரசு ஒடுக்குவதற்காக மத்திய அரசு மீது கமல்ஹாசன் குற்றம் சாடினார். 

விவசாயிகளுக்கு வாழ வழியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வேலைவாய்ப்பும் இல்லவே இல்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை அதிமுக ஆதரித்தது தமிழ் இனத்திற்கும், தேசத்திற்கும் செய்யப்பட்ட துரோகம். தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்சனை எழும்போது தீவிர போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடும். இளைஞர்கள் போராட்டத்தில் குதித்து அரசியலில் ஈடுபடுவது தவறு அல்ல. டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டது அரச பயங்கரவாதம். எதிர்காலத்தின் தூண்களான மாணவர்களை காவல்துறை மூலம் அடக்குவதுதான் அரசா?; மாணவர்கள் மீது விழும் அடி, கருத்துரிமை மீது விழும் அடி. 

பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்பட்ட உரிமை தமிழ் இந்துக்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை; பாகிஸ்தான் இந்துவுக்கு ஓர் நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஓர் நியாயமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

தலைப்புச்செய்திகள்