Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பத்தூர் அருகே 3 டன் செம்மரம் வீட்டில் பதுக்கி வைத்தவர் கைது

டிசம்பர் 18, 2019 04:54

திருப்பத்தூர்: ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்தி வந்து திருப்பத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருப்பத்தூர் மாவட்ட வன அலவலர் முருகன் உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் சோழராஜன் மற்றும் வனவர் சஞ்சீவி ஆகியோர் நேற்று இரவு திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி கிராமத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர் (வயது 45) என்பவரது வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் என்பவரை அழைத்துக்கொண்டு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டினுள் 31 துண்டுகளாக சுமார் 3 டன் எடை கொண்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த சங்கரிடம் உதவி வனபாதுகாவலர் ராஜ்குமார் விசாரணை நடத்தினார்.

செம்மரக் கட்டைகள் ஆந்திராவிலுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் வெட்டப்பட்டது. அங்கிருந்து லாரியில் துணி மூட்டைகளுக்குள் மறைத்து வைத்தும், கார்களுக்கு அடியில் பதுக்கியும் கடத்தி வந்துள்ளனர். அதிகாலை நேரங்களில் திருப்பத்தூருக்கு கொண்டு வந்து கொடுமாம்பள்ளி கிராமத்தில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர். இதில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.    

தலைப்புச்செய்திகள்