Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயங்கி விழுந்த இளம்பெண்ணை 4 கி.மீ. தூரம் சுமந்து சென்ற போலீஸ்காரர்

டிசம்பர் 19, 2019 09:53

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி-திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பதி அலிபிரி பகுதியில் இருந்து நடந்து சென்று மலை ஏறி சாமி தரிசனம் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

நேற்று ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அமர்நாத் ரெட்டி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பதி கோவிலுக்கு நடந்து வந்தனர். அவர்கள் அலிபிரியில் இருந்து மலையேற தொடங்கினார்கள்.

அப்போது வனப்பகுதியில் புஜ்ஜி என்ற இளம்பெண் திடீரென மயங்கி விழுந்தார். நீண்ட தூரம் நடந்து வந்த காரணத்தால் களைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி இருந்தார். அந்த பகுதியில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்கள் எதுவும் இல்லை.

இளம்பெண் புஜ்ஜிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ்காரர் குள்ளயப்பா என்பவர் இதை கவனித்தார். உடனடியாக அவர் புஜ்ஜியை தோளில் சுமந்துகொண்டு நடக்க தொடங்கினார். சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் இளம்பெண்ணை சுமந்துகொண்டு திருமலையை சென்று அடைந்தார். அங்கு அந்த பெண் அஸ்வினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அந்த பெண் நன்கு குணம் அடைந்து வருகிறார். இந்த நிலையில் போலீஸ்காரர் குள்ளயப்பா இளம்பெண்ணை சுமந்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

அதை பார்த்து ஏராளமானோர் போலீஸ்காரர் குள்ளயப்பாவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனும் போலீஸ்காரர் குள்ளயப்பாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், திருப்பதிக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களிடமும் குள்ளயப்பா போன்று போலீஸ்காரர்கள் கனிவுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்