Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை

டிசம்பர் 20, 2019 11:10

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் உன்னாவ் நகரில் 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டார். பங்கர்மா தொகுதியில் பா.ஜனதா சார்பில் 4 தடவை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கார், தன்னை கற்பழித்ததாக அந்த சிறுமி குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து குல்தீப் சிங் செங்காரும், அவரது கூட்டாளியான சாஸ்திரி சிங் என்பவரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். தற்போது மேஜரான பாதிக்கப்பட்ட அந்த பெண் உறவினர்களுடன் கடந்த ஜூலை மாதம் காரில் சென்ற போது லாரி மோதியது. இதில் உறவினர்கள் 2 பேர் பலியானார்கள்.

அந்த பெண்ணும், வக்கீலும் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்லும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக குல்தீப் சிங் செங்கார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வழக்கின் இறுதிகட்ட விசாரணை டெல்லி மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் 10-ந் தேதி நடைபெற்றது. அப்போது 16-ந்தேதி  தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

அதன்படி 16-ம் தேதி  தீர்ப்பு வழங்கிய நீதிபதி தர்மேஷ் சர்மா, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பை கேட்டதும் கோர்ட்டில் இருந்த குல்தீப் சிங் செங்கார் கதறி அழுதார். அதே வேளையில் அவரது கூட்டாளியான சாஸ்திரி சிங் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கின் தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்த நிலையில்,

உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றவாளியான பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டை விதித்து டெல்லி மாவட்ட கோர்ட்டு தண்டனையை அறிவித்துள்ளது. குல்தீப் செங்காருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தும் டெல்லி மாவட்ட  நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2017-ம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்