Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

டிசம்பர் 21, 2019 07:11

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், போலீசார் ஆகியோர் வாக்காளர்களை ஒழுங்கு படுத்தவும், கண்காணிக்கவும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வருமாறு:-

வாக்குச்சாவடிகளில் போலீசார் தேர்தல் அலுவலர்கள் கட்டளையிடுவதற்கு ஏற்ப பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களை ஒழுங்குபடுத்தி வாக்குச்சாவடிக்குள் அனுப்புவது போலீசாரின் முக்கிய கடமை.

மாற்றுத்திறனாளி வாக்காளர்களையும், பிறர் உதவியின்றி நடமாட இயலாத நலிவுற்ற வாக்காளர்களையும், வரிசையில் நிற்க விடாமல் முதலில் சென்று வாக்களிக்க அனுமதிக்கவும்.

வாக்குச்சாவடிக்குள் எவரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக்கூடாது. தேர்தல் தொடர்பாக பணியாற்றும் ஊழியர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட மற்ற நபர்களை மட்டுமே வாக்குச்சாவடிக்குள் தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்க வேண்டும்.

வேட்பாளர்களுடன் அவர்களுடைய தேர்தல் முகவர் ஒருவரை மட்டுமே அனுமதிக்கலாம். வாக்காளர்களுடன் வரும் குழந்தைகளையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம். பிறர் உதவியுடன் நடமாட முடியாத மாற்றத்திறனாளிகளுடன் துணையாக ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம்.

பொதுவாக போலீசார் வாக்குச்சாவடிக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் அனுமதித்தால் மட்டுமே போலீசார் உள்ளே செல்ல வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் செல்பி எடுப்பது அல்லது வீடியோ எடுப்பதை தலைமை தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்கக்கூடாது. இந்த செயல்களை தடுக்க செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்