Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியுரிமை திருத்த சட்டம்: அதிர்ச்சியில் பா.ஜ., தலைவர்கள்

டிசம்பர் 21, 2019 05:10

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. தலைநகர் டில்லியிலும் கலவரம் வெடித்துள்ளது; பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன; மெட்ரோ ரயில் நிலையங்களும் அடிக்கடி மூடப்படுகின்றன. இதனால், டில்லி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் கை கோர்த்துள்ளன. இது, பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போராட்டங்கள் தொடர்ந்து நடந்தால் என்னவாகும் என, அவர்கள் கவலைப்படுகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன; இதனால், சிறுபான்மையினருக்கு பிரச்னை ஏற்படுமா என்பது போன்ற விபரங்கள், போராட்டக்காரர்கள் பலருக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை. 'குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது' என, டில்லி இமாம், அகமது புகாரி கூறியிருக்கிறார். அப்படியிருந்தும், அதை ஏற்காமல் போராட்டம் நடைபெறுகிறது.

பா.ஜ., கட்சியினர் அதிர்ச்சியில் இருந்தாலும், மோடியும், அமித் ஷாவும், இந்தப் போராட்டங்கள், சில நாட்களில் முடிவிற்கு வரும் என, நினைக்கின்றனர். 'இந்த சட்டத்தால், சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது' என, உள்துறை அமைச்சகம், 'மீடியா'க்களில் தினந்தோறும் விளக்கங்களை வெளியிட்டு வருகிறது.

முதலில் முத்தலாக் சட்டம், பிறகு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், அடுத்து அயோத்தி தீர்ப்பால், உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த முஸ்லிம்களின் கோபம், இப்போது வெளிவருகிறது என, பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர். சில தலைவர்களோ, 'மோடியும், அமித் ஷாவும் அவசரப்பட்டு விட்டனர்; குடியுரிமை திருத்த சட்டத்தை சிறிது காலம் கழித்து நிறைவேற்றியிருக்கலாம்' எனக் கூறுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்