Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழைய பிரசவ ஆஸ்பத்திரி இடத்தை ஆதீனத்திடம் ஒப்படைக்க கோரிக்கை

டிசம்பர் 24, 2019 07:15

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பழைய பிரசவ ஆஸ்பத்திரி இடத்தை ஆதீனத்திடம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறையில் சின்னக்கடை வீதி சியாமளா தேவி கோயில் அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் கடந்த எண்பது ஆண்டுகளுக்கு முன்பு தருமபுர ஆதீனத்தால் இலவச மருத்துவமனை நடத்துவதற்காக மயிலாடுதுறை நகராட்சியிடம்  ஒப்படைக்கப்பட்டது.  

அந்த இடத்தில் மயிலாடுதுறை நகராட்சியும் இலவச பிரசவம் மருத்துவமனை நடத்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை நகராட்சி பிரசவ மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்தை மயிலாடுதுறை கூறைநாடு வண்டிப்பேட்டை அருகில் அமைத்து பிரசவ ஆஸ்பத்திரி இடமாற்றம் செய்யப்பட்டது. அதுமுதல் பழைய பிரசவ ஆஸ்பத்திரி கட்டிடம் எந்தவித செயல்பாடும் இல்லாமல் கட்டிடம் தற்போது சிதலமடைந்து அது சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிவிட்டது. 

நகராட்சி அந்த இடத்தை மருத்துவமனைக்காக பெற்றுவிட்டு தற்போது அந்த இடத்தில் மருத்துவமனை நடத்தவில்லை. மருத்துவமனை நடத்த தான் அப்போதைய குருமகாசன்னிதானம் அவர்களால் அந்த இடம் நகராட்சிக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 

தற்போது மருத்துவமனை நடைபெறாத காரணத்தினால் மேற்படி இடத்தை மயிலாடுதுறை நகராட்சி உடனடியாக தருமபுர ஆதீனத்திடம்  ஒப்படைக்க கோரப்படுகிறது.  ஒரு மாத காலத்திற்குள் மயிலாடுதுறை நகராட்சி மேற்படி இடத்தை தருமபுர ஆதீனம் ஒப்படைக்காவிட்டால் பொதுநல வழக்கு தொடரப்பட்டு அந்த இடம் நீதிமன்றம் மூலம் தருமபுர ஆதீனம் ஒப்படைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பல வருடங்களாக அங்கே மருத்துவமனை செயல்பட்டு வந்து ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. தற்போது நகராட்சி அந்த இடத்தில் மருத்துவமனையை  நடத்தவில்லை இந்தப் பகுதி மக்களுக்கு மருத்துவமனை அங்கு செயல்பட்டால் மிகுந்த பலனளிக்கும். 

புதிதாக பட்டம் ஏற்று இருக்கக்கூடிய தருமபுர ஆதீனத்தின் உடைய 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மேற்படி இடத்தை நகராட்சி இடமிருந்து திரும்பப் பெற்று அந்த இடத்தில் தருமபுர ஆதீனத்தின் மூலம் ஒரு இலவச மருத்துவ சாலை அமைத்து ஏழைகளுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்