Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒவ்வொரு அறிவிப்புக்கும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும்

மார்ச் 05, 2019 05:54

புதுடெல்லி: ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளியிடும் போதும் விமான பணிப்பெண்கள் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம்  உத்தரவிட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருவதால் இந்திய மக்கள் இடையே தேசப்பற்று உணர்வு அதிகரித்துள்ளது. 

இதே உணர்வுகளை விமான பயணிகளிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. 

இதன்படி விமான பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பு வெளியிடும் போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும் பயணிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று விமான பணிப்பெண்கள் அறிவிப்புகளை வெளியிடுவார்கள். 

மேலும் இடையிடையே முக்கியமான தகவல்களை அறிவிப்பாக கூறுவார்கள். ஊர் நெருங்கியதும் அதுபற்றியும் அறிவிப்புகள் வெளியிடப்படும். 

இவ்வாறு அறிவிப்புகளை அவர்கள் கூறி முடிக்கும் போது, ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்று உத்தரவில் கூறி உள்ளனர். விமானத்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் பயணிகளிடம் விமான பணிப்பெண்கள் ‘நமஸ்கார்’ என்று சொல்வது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அவர்கள் பயணிகளிடம் மரியாதையாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எப்போதும் புன்னகை முகத்துடன் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. 

அவ்வாறு நடந்து கொள்வது விமான பயணிகளுக்கும் ஒரு உற்சாகத்தையும், நன்மதிப்பையும் கொடுக்கும். இப்போது தேசப்பற்றையும் உருவாக்கும் வகையில் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.விமான பைலட்டுகள் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று ஏற்கனவே 2016-ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்