Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

7,000 பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீரிலிருந்து உடனடி வாபஸ்

டிசம்பர் 25, 2019 04:31

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரிலிருந்து 7 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை, மத்திய அரசு, ஆகஸ்டில் ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், மாநில அந்தஸ்தை இழந்தது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டனர். பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரிலிருந்து 72 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு கம்பெனி பாதுகாப்பு படையில், சுமார் 100 வீரர்கள் உள்ள நிலையில், சி.ஆர்.பி.எப்.,(மத்திய ரிசர்வ் போலீஸ்) - 24 கம்பெனி வீரர்கள், பி.எஸ்.எப்.,(எல்லை பாதுகாப்பு படை), ஐ.டி.பி.பி.,(இந்தோ - திபெத் எல்லைக் காவல்படை), சி.ஐ.எஸ்.எப்.,(மத்திய தொழில் பாதுகாப்பு படை) மற்றும் எஸ்.எஸ்.பி.,(சாஸ்திர சீமா பால்) ஆகியவற்றிலிருந்து தலா 12 கம்பெனி வீரர்கள் என மொத்தம் சுமார் 7,000 வீரர்கள் காஷ்மீரிலிருந்து, தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப உள்ளனர். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்