Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் ராஜினாமா

மார்ச் 05, 2019 05:57

பெங்களூரு: காங்கிரசை சேர்ந்த உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ. திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து கொடுத்தார்.  

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் மந்திரி பதவி கிடைக்காததால் நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி ஆகியோரும், மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளியும் காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சி தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். 

சமீபத்தில் பா.ஜனதா நடத்திய ஆபரேசன் தாமரையில் சிக்கி இவர்கள் 4 பேரும் மும்பையில் தங்கியிருந்தனர். மேலும் அவர்கள் 4 பேரும் பெங்களூருவில் 2 தடவை நடந்த சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் அவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் நோட்டீசு அனுப்பியது. இதற்கு அவர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என நேரில் ஆஜராகி விளக்கமளிக்க காங்கிரஸ் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. 

இதையடுத்த 4 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம், சட்டசபை காங்கிரஸ் தலைவரான சித்தராமையா மனு அளித்தார். அதுபற்றி சபாநாயகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

இதற்கிடையே பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கடந்த மாதம் (பிப்ரவரி) கர்நாடக சட்டசபை கூட்டம் நடைபெற்றபோது, கடைசி 2 நாட்கள் உமேஷ்ஜாதவ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். 

அதன்பிறகு காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள ரமேஷ்ஜார்கிகோளி, நரேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகிய 3 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும், அவர்களில் உமேஷ் ஜாதவ், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

கோலாரில் உள்ள வீட்டில் சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த போது எடுத்த படம். 

இந்த நிலையில் நேற்று கலபுரகி மாவட்டம் சின்சோலி தொகுதி எம்.எல்.ஏ.வான உமேஷ் ஜாதவ் சபாநாயகர் ரமேஷ்குமாரை கோலாரில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். அப்போது தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அவர் கொடுத்தார். 

கடிதத்தை பெற்றுக்கொண்ட சபாநாயகர், ராஜினாமா கடிதத்தை பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

உமேஷ்ஜாதவ் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா? அல்லது ஏற்கனவே காங்கிரஸ் கொடுத்துள்ள மனுவின் அடிப்படையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

உமேஷ்ஜாதவ், பா.ஜனதாவில் சேர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளதாகவும், அதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 104 உறுப்பினர்கள் உள்ளனர். அதுபோல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நியமன உறுப்பினர் உள்பட 80 உறுப்பினர்களும் (சபாநாயகர் தவிர்த்து), ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 உறுப்பினர்களும், பகுஜன்சமாஜ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும், சுயேச்சைகள் 2 பேரும் உள்ளனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. 

தற்போது உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்துள்ளதால், காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. 

 

தலைப்புச்செய்திகள்